உமர் ஷரீஃப் — 342
23:1 திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
23:2 அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள்.
23:3 இன்னும், அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகி இருப்பார்கள்.
23:4 இன்னும், அவர்கள் ஸகாத்தை சரியாக நிறைவேற்றுவார்கள்.
23:5 இன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை (விபச்சாரத்தை விட்டும் ஓரின சேர்க்கையை விட்டும்) பாதுகாப்பார்கள்.
23:6 தங்கள் மனைவியர்களிடம்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடம் தவிர. (ஆகவே, அவர்கள் மற்ற பெண்களிடம் தங்கள் ஆசையை தீர்க்க மாட்டார்கள்.) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பழிக்கப்படுபவர்கள் அல்லர்.
23:7 ஆக, (தனது மனைவி, அல்லது தனது அடிமைப் பெண் ஆகிய) இவர்கள் அல்லாத பெண்களிடம் யார் (காமத்தை) தேடுவார்களோ அவர்கள்தான் (அல்லாஹ்வின் சட்டத்தை மீறிய) எல்லை மீறிகள் ஆவார்கள்.
23:8 இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனித்து நடப்பார்கள்.
23:9 இன்னும், அவர்கள் தங்கள் தொழுகைகளை பேணி பாதுகாப்பார்கள்.
23:10 அவர்கள்தான் (சொர்க்கத்தை) சொந்தமாக்கிக் கொள்பவர்கள்,
23:11 ‘ஃபிர்தவ்ஸ்’ (என்னும்) சொர்க்கத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
23:12 திட்டவட்டமாக களி மண்ணிலிருந்து (படைக்கப்பட்ட முதல் மனிதனின்) இந்திரியத்திலிருந்து மனிதர்களை நாம் படைத்தோம்.
23:13 பிறகு, அவனை உறுதியான ஒரு தங்குமிடத்தில் (-தாயின் கற்ப அறையில்) ஓர் இந்திரியத் துளியாக நாம் வைத்தோம்.
23:14 பிறகு, அந்த இந்திரியத் துளியை ஓர் இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம் ஆக்கினோம். ஆக, அந்த இரத்தக் கட்டியை ஒரு சதைத் துண்டாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த சதைத் துண்டை எலும்புகளாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த எலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பிறகு அவனை (உயிர் ஊதி அதன் மூலம்) வேறு ஒரு (புதிய) படைப்பாக நாம் உருவாக்கினோம். (பொருள்களை) செய்பவர்களில் மிக அழகிய (முறையில்) செய்பவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.
23:15 பிறகு, நிச்சயமாக நீங்கள் இதற்குப் பின்னர் மரணித்து விடுவீர்கள்.
23:16 பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்படுவீர்கள்.
23:17 திட்டவட்டமாக உங்களுக்கு மேல் ஏழு வானங்களை நாம் படைத்தோம். (-அந்த வானங்களுக்கு கீழே உள்ள நமது) படைப்புகளைப் பற்றி நாம் கவனமற்றவர்களாக (மறந்தவர்களாக) இல்லை.