>

உமர் ஷரீஃப் — 183

8:46 இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இன்னும், (உங்களுக்குள்) தர்க்கிக்காதீர்கள் (சண்டை சச்சரவு செய்து கொள்ளாதீர்கள்)!. அவ்வாறாயின், நீங்கள் தோற்றுவிடுவீர்கள்; இன்னும், உங்கள் ஆற்றலும் போய்விடும். இன்னும், நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

8:47 இன்னும், எவர்கள் பெருமைக்காகவும் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் இல்லங்களிலிருந்து புறப்பட்டார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை சூழ்ந்திருப்பவன் ஆவான்.

8:48 இன்னும், ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அலங்கரித்து, “மக்களில் இன்று உங்களை வெல்பவர் அறவே இல்லை; இன்னும், உங்களுக்கு நிச்சயமாக நான் துணை ஆவேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, இரு பிரிவினர்களும் ஒருவருக்கொருவர் பார்த்தபோது தன் இரு குதிங்கால்கள் மீது (ஷைத்தான்) திரும்பி (ஓடி)னான். இன்னும், “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகியவன் ஆவேன். நீங்கள் பார்க்காததை நிச்சயமாக நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்; இன்னும், அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்று கூறினான்.

8:49 நயவஞ்சகர்களும், தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எவர் அல்லாஹ் மீது நம்பிக்கை வை(த்து அவனை சார்ந்து இரு)ப்பாரோ (அவரே வெற்றியாளர்.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.

8:50 (நபியே!) வானவர்கள், நிராகரித்தவர்களை - அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவர்களாக - “எரிக்கக்கூடிய (நரக) தண்டனையை சுவையுங்கள்” (என்று கூறியவர்களாக) - உயிர் கைப்பற்றும்போது நீர் பார்த்தால் (அது ஒரு பயங்கரமான காட்சியாக இருக்கும்).

8:51 அதற்குக் காரணம், “உங்கள் கரங்கள் முற்படுத்தியவையும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அறவே அநீதியிழைப்பவன் இல்லை என்பதும் ஆகும்.”

8:52 ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தின் நிலைமையைப் போன்றும்; இன்னும், அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்றும் (இவர்களுடைய நிலைமை இருக்கிறது). அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவன், தண்டிப்பதில் கடுமையானவன்.