>

உமர் ஷரீஃப் — 149

6:152 இன்னும், அனாதையின் செல்வ(ம் உங்கள் பராமரிப்பில் இருந்தால் அந்த செல்வ)த்தின் பக்கம் மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். இறுதியாக, அவர் தனது பருவத்தை அடையும்போது (அவருடைய செல்வத்தை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்!) இன்னும், அளந்து கொடுப்பதையும் நிறுத்து கொடுப்பதையும் நீதமாக முழுமைப்படுத்தி செய்யுங்கள். ஓர் ஆன்மாவை - அதன் சக்திக்கு உட்பட்டே தவிர - நாம் சிரமப்படுத்துவதில்லை. இன்னும், நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக (தீர்ப்பு) கூறுங்கள். அல்லாஹ்வின் (பெயர் கூறி நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருடன் செய்யும்) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். இவை, - நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான்.

6:153 இன்னும், நிச்சயமாக (இஸ்லாமாகிய) இது என் நேரான பாதை (-மார்க்கம்) ஆகும். ஆக, அதைப் பின்பற்றுங்கள்; இன்னும், (அதைத் தவிர மற்ற) பாதைகளை (-கொள்கைகளைப்) பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய பாதையிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். இவை, - நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக (அவன்) இவற்றின் மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறான்.

6:154 பிறகு, நல்லறம் புரிந்தவர் மீது (அருள்) நிறைவாகுவதற்காகவும் எல்லாவற்றையும் விவரிப்பதற்காகவும் நேர்வழியாக, கருணையாக அமைவதற்காகவும் அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நம்பிக்கை கொள்வதற்காகவும் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்(து அதன் மூலம் அவருடைய சமுதாய மக்களை உபதேசித்)தோம்.

6:155 (மனிதர்களே!) இதுவோ பாக்கியமிக்க (அதிமான நன்மைகளை உடைய) வேதமாகும். இதை நாமே இறக்கினோம். ஆகவே, நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக இதைப் பின்பற்றுங்கள். இன்னும் (அல்லாஹ்வை) அஞ்சுங்கள்.

6:156 (இணைவைப்பவர்களே!) “வேதம் இறக்கப்பட்டதெல்லாம் நமக்கு முன்னர் (சென்ற யூதர்கள், கிறித்தவர்கள் ஆகிய) இரு கூட்டங்கள் மீதுதான். நாங்கள் அவர்க(ள் படித்த வேதங்க)ளின் படிப்பறிவை அறியாதவர்களாகவே நிச்சயமாக இருந்தோம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை உங்களுக்கு இறக்கினோம்).

6:157 அல்லது, “நம்மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களை விட அதிகம் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருப்போம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை உங்களுக்கு அருளினோம்). ஆக, உங்கள் இறைவனிடமிருந்து, மிகத் தெளிவான சான்றும் நேர்வழியும் கருணையும் உங்களிடம் வந்துவிட்டது. ஆக, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு விலகியவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நம் வசனங்களைவிட்டு (இவ்வாறு) விலகியவர்களுக்கு அவர்கள் (உண்மையைவிட்டு) விலகிக் கொண்டிருந்ததன் காரணமாக கெட்ட தண்டனையை கூலியாகக் கொடுப்போம்.