>

உமர் ஷரீஃப் — 116

5:46 இன்னும், அவர்களுடைய அடிச்சுவடுகளில் அவர்களை பின்தொடர்ந்து மர்யமுடைய மகன் ஈஸாவை (இஸ்ரவேலர்களுக்கு நபியாக) அனுப்பினோம். அவர் தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக இருந்தார். இன்னும், அவருக்கு ‘இன்ஜீல்’ஐ கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, நேர்வழியாக, அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாக இன்ஜீலை ஆக்கினோம்.

5:47 இன்ஜீலுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் பாவிகள்.

5:48 இன்னும், (நபியே!) முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக, அவற்றைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கிய (இவ்வேதத்)தின் மூலமே அவர்களுக்கு மத்தியில் நீ தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டுவிட்டு அவர்களுடைய மன விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். இன்னும், அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு (ஷரீஅத்தை உடைய) சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்த (வேதத்)தில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் போட்டிபோட்டு முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை (அதற்கு கூலி கொடுப்பதன் மூலம் மறுமையில்) உங்களுக்கு அவன் அறிவிப்பான். (உண்மையை பின்பற்றியவர்கள் அல்லாஹ்வின் அருளிலும் பொய்யை பின்பற்றியவர்கள் தண்டனையிலும் இருப்பார்கள்.)

5:49 இன்னும், (நபியே!) அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தின் மூலம் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. இன்னும், அவர்களின் மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். இன்னும், உமக்கு அல்லாஹ் இறக்கியதில் சிலவற்றிலிருந்து உம்மை அவர்கள் திருப்பிவிடுவதை குறித்தும் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக. ஆக, அவர்கள் (உம்மை புறக்கணித்து) திரும்பினால் அறிந்து கொள்வீராக “அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களுடைய பாவங்கள் சிலவற்றின் காரணமாக அவர்களை சோதிப்பதைத்தான்.” இன்னும், நிச்சயமாக மனிதர்களில் அதிகமானோர் பாவிகள்தான்.

5:50 ஆக, அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் தேடுகிறார்கள்? (அல்லாஹ் உடைய சட்டங்களின் நீதியை சிந்தித்து புரிந்து அவற்றை) உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்?