உமர் ஷரீஃப் — 554
62:9 நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் (வெள்ளிக் கிழமை பிரசங்கத்தை செவியுறுவதன் பக்கம்) நீங்கள் விரையுங்கள்! இன்னும், வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகிறவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
62:10 ஆக, தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள்! அல்லாஹ்வின் (இரண) அருளைத் தேடுங்கள்! நீங்கள் வெற்றி அடைவதற்காக நீங்கள் அல்லாஹ்வை அதிகம் (புகழ்ந்தும் அவனுக்கு அதிகம் நன்றி செலுத்தியும்) நினைவு கூருங்கள்!
62:11 இன்னும், (முஸ்லிம்களில் சிலர் இருக்கிறார்கள்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுகிறார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம் நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்விடம் உள்ளதுதான் (உலகத்தின்) வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.”
63:1 நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகிறான்.
63:2 அவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களை (அல்லாஹ்வின் உலக தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) கேடயமாக ஆக்கிக்கொண்டனர். ஆகவே (அதைக் கொண்டு) அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை மிகக் கெட்டுவிட்டன.
63:3 அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (முதலில் வெளிப்படையாக) நம்பிக்கை கொண்டனர், (ஆனால்) பிறகு, (உள்ளுக்குள்) நிராகரித்தனர். ஆகவே, அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரை இடப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (தங்களுக்குரிய சீர்திருத்தத்தை, நன்மையை) புரிய மாட்டார்கள்.
63:4 இன்னும், (நபியே!) நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் உடல்கள் (-வெளித் தோற்றங்கள்) உம்மைக் கவரும். அவர்கள் (உம்மிடம் ஏதும்) கூறினால் அவர்களின் கூற்றை நீர் செவியுறுவீர். (அவர்களின் பேச்சு அந்தளவு கவர்ச்சியாக, ஈர்ப்புடையதாக இருக்கும். அவர்களின் உள்ளங்களும் அறிவுகளும் பயனற்றவையாக இருப்பதால் அவர்களின் வெறும் உடல் தோற்றம் மட்டும்தான் பிரமிக்க வைக்கக்கூடியதாக இருக்கும். எனவே,) அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரப்பலகைகளைப் போல் இருப்பார்கள். ஒவ்வொரு சத்தத்தையும் தங்களுக்கு பாதகமாகவே எண்ணுவார்கள். அவர்கள்தான் (உங்களுக்கு மோசமான) எதிரிகள். ஆகவே, அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அல்லாஹ் அவர்களை அழிப்பான். (நேர்வழியில் இருந்து) அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்!