உமர் ஷரீஃப் — 449
37:77 இன்னும், அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்.
37:78 இன்னும், பிற்காலத்தில் வருபவர்களில் அவரைப் பற்றிய நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
37:79 உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
37:80 நிச்சயமாக நாம் இவ்வாறுதான் நல்லவர்களுக்கு கூலி கொடுப்போம்.
37:81 நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.
37:82 பிறகு, மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
37:83 நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்.
37:84 அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
37:85 தனது தந்தை இன்னும் தனது மக்களை நோக்கி, எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
37:86 அல்லாஹ்வை அன்றி பல பொய்யான தெய்வங்களையா (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்கள்?
37:87 ஆக, அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (அவன் ஒருவனை மட்டும் வணங்காமல் ஏன் கற்பனையாக பல தெய்வங்களை உருவாக்கினீர்கள்?)
37:88 ஆக, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.
37:89 தொடர்ந்து அவர் கூறினார், “நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்”.
37:90 ஆகவே, அவர்கள் முகம் திரும்பியவர்களாக அவரை விட்டு விலகிச் சென்றனர்.
37:91 ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் (இப்ராஹீம்) விரைந்தார். ஆக, அவர் (அந்த சிலைகளை நோக்கி) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?”
37:92 “உங்களுக்கு என்ன ஏற்பட்டது? நீங்கள் ஏன் பேசுவதில்லை?”
37:93 ஆக, வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.
37:94 ஆக, அவர்கள் விரைந்தவர்களாக அவர் பக்கம் முன்னோக்கி வந்தனர்.
37:95 அவர் கூறினார்: “நீங்கள் (கற்களிலும் கட்டைகளிலும்) எதை செதுக்கி உருவாக்குகிறீர்களோ அதை வணங்குகிறீர்களா?”
37:96 “அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்.”
37:97 அவர்கள் கூறினார்கள்: “அவருக்கு ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எரியுங்கள்!) ஆக, அந்த எரியும் நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்!”
37:98 ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். ஆக, நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்.
37:99 இன்னும், அவர் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
37:100 “என் இறைவா! எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!”
37:101 ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
37:102 ஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன் ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.”