உமர் ஷரீஃப் — 91
4:80 எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் புறக்கணித்தார்களோ அவர்களின் செயல்களை கவனிப்பவராக(வும் அவர்களை விசாரிப்பவராகவும்) நாம் உம்மை அனுப்பவில்லை.
4:81 “(நபியே! எங்கள்) கீழ்ப்படிதல் (உமக்கு உண்டு - நாங்கள் உமக்கு கீழ்ப்படிந்து நடப்போம்)” என்று கூறுகிறார்கள். ஆக, உம்மிடமிருந்து வெளியேறினால் அவர்களில் ஒரு கூட்டம் நீர் கூறுவதற்கு மாற்றமாக இரவில் சதி ஆலோசனை செய்கிறார்கள். அவர்கள் இரவில் சதி ஆலோசனை செய்வதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். ஆகவே, (நீர்) அவர்களைப் புறக்கணிப்பீராக! இன்னும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக. (உம்மை பாதுகாக்க) அல்லாஹ்வே போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்.
4:82 ஆக, குர்ஆனை அவர்கள் ஆழமாக ஆராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்ததாக இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:83 இன்னும், பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய ஒரு செய்தி அவர்களிடம் வந்தால் அதை (உடனே) பரப்புகிறார்கள். அதை தூதரிடமும், அவர்களில் உள்ள ஆட்சியாளர்களிடமும் அவர்கள் எடுத்து சென்றிருந்தால் அவர்களில் அதை புலனாய்வு செய்பவர்கள் அதை சரியாக அறிந்திருப்பார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்திருந்தால் (உங்களில்) சிலரைத் தவிர (அனைவரும்) ஷைத்தானை பின்பற்றி இருப்பீர்கள்.
4:84 ஆக, (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! நீர் உம்மைத் தவிர (பிறரை) கட்டாயப்படுத்த முடியாது. (இறை கட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல.) இன்னும், நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுவீராக! நிராகரிப்பாளர்களின் வலிமையை (-அவர்களின் தாக்குதலை) அல்லாஹ் தடுத்து விடுவான். அல்லாஹ் வலிமையிலும் (எதிரிகளை தாக்குவதிலும்) மிகக் கடுமையானவன்; இன்னும், (அவர்களை) தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்.
4:85 எவர் நல்ல சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு பங்கு இருக்கும். இன்னும், எவர் தீய சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு குற்றம் இருக்கும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
4:86 உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதை முகமனாக கூறுங்கள். அல்லது, அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்களது) ஒவ்வொரு செயலையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்.