உமர் ஷரீஃப் — 583
78:31 அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி (-நற்பாக்கியம்) உண்டு.
78:32 தோட்டங்களும் திராட்சைகளும் (அவர்களுக்கு) உண்டு.
78:33 இன்னும், சம வயதுடைய, வாலிபமான கன்னிகளும் உண்டு.
78:34 இன்னும், (மதுவால்) நிரம்பிய கிண்ணமும் (அவர்களுக்கு) உண்டு.
78:35 அதில் வீண் பேச்சையும், (ஒருவர் மற்றவரைப்) பொய்ப்பிப்பதையும் செவியுற மாட்டார்கள்.
78:36 உம் இறைவனிடமிருந்து கூலியாக, கணக்கிடப்பட்ட (போதுமான) அருட்கொடையாக (இவற்றை வழங்கப்படுவார்கள்).
78:37 (அவன்,) வானங்கள், பூமி, இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் அதிபதி, பேரருளாளன் (ஆவான்). அவனிடம் பேசுவதற்கு உரிமை பெறமாட்டார்கள்,
78:38 ஜிப்ரீலும், மலக்குகளும் வரிசையாக நிற்கிற நாளில். பேரருளாளன் (அல்லாஹ்) எவருக்கு அனுமதித்தானோ அவரைத் தவிர பேசமாட்டார்கள். இன்னும், (பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட) அவர் சரியானதையே கூறுவார்.
78:39 அதுதான் உண்மையான நாள். (அது நிகழ்ந்தே தீரும்.) ஆக, யார் (நற்பாக்கியத்தை) நாடுவாரோ (அவர்) தம் இறைவனருகில் (தனக்கு) மீளுமிடத்தை (-தங்குமிடத்தை) ஆக்கிக்கொள்வார்.
78:40 மனிதன் தனது இரு கரங்கள் முற்படுத்தியவற்றைப் பார்க்கிற நாளில் (நிகழ இருக்கிற) சமீபமான ஒரு தண்டனையைப் பற்றி நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்தோம். இன்னும் (அந்நாளில்) நிராகரிப்பாளன் கூறுவான்: “நான் மண்ணாக ஆகிவிடவேண்டுமே” என்று.
79:1 (தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
79:2 (நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!
79:3 நீந்துவோர் மீது சத்தியமாக!
79:4 (இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!
79:5 காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்,)
79:6 பூமி(யும் மலையும் பலமாக) அதிருகின்ற நாளில்.
79:7 பின்தொடரக்கூடியது (-மக்கள் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறையாக எக்காளம் ஊதப்படுதல்) அதை பின்தொடரும்.
79:8 அந்நாளில், (சில) உள்ளங்கள் பயந்து நடுங்கும்.
79:9 அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ் நோக்கியவையாக இழிவுற்றதாக இருக்கும்.
79:10 (நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (இறந்துவிட்டால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?’’
79:11 (அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?
79:12 அவ்வாறாயின், அது (நமக்கு) நஷ்டமான திரும்புதல்தான் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள். (-நாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கும் நிலையில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால் நமக்கு நரகம்தான். அது நமக்கு நஷ்டமாயிற்றே என்று கேலியாக பேசுகிறார்கள்.)
79:13 (மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் சத்தம்தான். (ஒரு முறை ஊதப்பட்டவுடன் மறுமை நிகழ்ந்து விடும்.)
79:14 அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.
79:15 (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
79:16 “துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை நினைவு கூருங்கள்.