உமர் ஷரீஃப் — 556
64:1 வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
64:2 அவன்தான் உங்களைப் படைத்தான். ஆக, உங்களில் நிராகரிப்பாளரும் இருக்கிறார். உங்களில் நம்பிக்கையாளரும் இருக்கிறார். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
64:3 வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காக அவன் படைத்தான். இன்னும், அவன் உங்களை உருவமைத்தான். ஆக, உங்கள் உருவங்களை அழகாக்கினான். அவன் பக்கமே (உங்கள்) மீட்சி இருக்கிறது.
64:4 வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். இன்னும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் நன்கறிவான். (மனிதர்களின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
64:5 இதற்கு முன்னர் நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? ஆக, அவர்களோ தங்களது (பாவமான) காரியத்தின் தீய முடிவை (இவ்வுலகில்) சுவைத்தனர். இன்னும், (மறுமையில்) துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
64:6 அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். ஆக, “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்?” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர். இன்னும் (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் அவர்களை விட்டு தேவையற்றவனாக இருக்கிறான். அல்லாஹ் முற்றிலும் நிறைவானவன் (படைப்புகளிடம் எவ்வித தேவையும் அற்றவன்), மகா புகழுக்குரியவன் ஆவான்.
64:7 “அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள்” என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு, நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக நீங்கள் அறிவித்துக் கொடுக்கப்படுவீர்கள். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!”
64:8 ஆகவே, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (குர்ஆன் எனும்) நாம் இறக்கிய ஒளியையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
64:9 ஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள்! அதுதான் (சிலைகளை வணங்கிய மக்களும் இஸ்லாமை நிராகரித்த மக்களும்) ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். இன்னும், அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான (பாக்கியமிக்க) வெற்றியாகும்.