உமர் ஷரீஃப் — 545
58:22 அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிற மக்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுபவர்களை (மார்க்க சட்டங்களை எதிர்ப்பவர்களை) நேசிப்பவர்களாக இருப்பதை நீர் காணமாட்டீர். (மார்க்க சட்டத்தை எதிர்க்கிற) அவர்கள் தங்கள் தந்தைகளாக; அல்லது, தங்கள் பிள்ளைகளாக; அல்லது, தங்கள் சகோதரர்களாக; அல்லது, தங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! இத்தகையவர்கள்தான் - இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஈமானை உறுதிபடுத்திவிட்டான். இன்னும் அவர்களை தன் புறத்திலிருந்து உதவியைக் கொண்டு பலப்படுத்தினான். இன்னும், அவன் அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்குவார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வான். (அவர்களினால் மகிழ்ச்சி அடைவான்.) அவர்களும் அவனை பொருந்திக் கொள்வார்கள். (அவர்களும் அவனால் மகிழ்ச்சி அடைவார்கள்.) அவர்கள்தான் அல்லாஹ்வின் கட்சியினர். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அல்லாஹ்வின் கட்சியினர்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.”
59:1 வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதித்து தொழுகின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
59:2 அவன்தான் வேதக்காரர்களில் (இந்த நபியை) நிராகரித்தவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து முதல் முறை (ஷாம் தேசத்தில் அவர்களை) ஒன்று திரட்டுவதற்காக வெளியாக்கினான். அவர்கள் (மதீனாவை விட்டு) வெளியேறுவார்கள் என்று (முஃமின்களே!) நீங்கள் நினைத்துப்பார்க்கவில்லை. தங்களது கோட்டைகள் தங்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்கும் என நிச்சயமாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அல்லாஹ், (தனது தண்டனையை) அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில் அவர்களிடம் (கொண்டு) வந்தான். அவர்களின் உள்ளங்களில் அவன் திகிலைப் போட்டான். அவர்களுடைய வீடுகளை அவர்களின் கரங்களினால்; இன்னும், (முஃமின்களுக்கு அவர்கள் பணியாததால்) முஃமின்களின் கரங்களினால் நாசப்படுத்திக் கொண்டனர். ஆகவே, பார்வை உடையவர்களே! படிப்பினை பெறுங்கள்!
59:3 (அவர்களின் இல்லங்களில் இருந்து) வெளியேறுவதை அல்லாஹ் அவர்கள் மீது விதித்திருக்கவில்லை என்றால் இவ்வுலகிலேயே அவர்களை அவன் கண்டிப்பாக (கடுமையான தண்டனையால்) தண்டித்திருப்பான். இன்னும், அவர்களுக்கு மறுமையில் நரக தண்டனை உண்டு.