உமர் ஷரீஃப் — 489
42:52 இவ்வாறுதான், நாம் நமது கட்டளையினால் (நம்மிடமிருந்து இந்த குர்ஆனை எல்லோருக்கும்) அருளாக (இருக்கும்படி) உமக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்று நீர் அறிந்திருக்கவில்லை. எனினும், நாம் இ(ந்த வேதத்)தை ஓர் ஒளியாக ஆக்கினோம். இதன் மூலம் நமது அடியார்களில் நாம் நாடுகிறவர்களுக்கு நாம் நேர்வழி காட்டுகிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறீர்.
42:53 அல்லாஹ்வின் பாதையின் பக்கம் (நீர் நேர்வழி காட்டுகிறீர்). வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் (எல்லாம்) திரும்புகின்றன.
43:1 ஹா மீம்.
43:2 (சொல்லாலும் கருத்தாலும்) தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
43:3 நிச்சயமாக நாம் இதை அரபிமொழியில் ஓதப்படுகிற குர்ஆனாக ஆக்கினோம், நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக.
43:4 நிச்சயமாக நம்மிடம் (இருக்கின்ற அல்லவ்ஹுல் மஹ்ஃபூள் என்ற) தாய் புத்தகத்தில் பதியப்பட்டுள்ள இ(ந்த வேதமான)து மிக உயர்ந்ததும், மகா ஞானமுடையதும் ஆகும்.
43:5 ஆக, நீங்கள் எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருக்க, உங்களை விட்டும் தண்டனையை அகற்றி (உங்களை நாங்கள் தண்டிக்காமல்) விடுவோமா? (நீங்கள் இந்த குர்ஆனைக் கொண்டு நேர்வழி பெறாமல், எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருப்பதால் இந்த குர்ஆனை தொடர்ந்து இறக்குவதை நாம் விட்டுவிடுவோமா?)
43:6 முன்னோரில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம்.
43:7 அவர்களிடம் நபி எவரும் வருவதில்லை, அவர்கள் அவரை கேலி செய்பவர்களாக இருந்தே தவிர.
43:8 ஆக, (உம்மை ஏற்க மறுக்கின்ற) இவர்களைவிட வலிமையால் மிக பலமான (அ)வர்களை நாம் அழித்தோம். இன்னும், முன்னோரின் உதாரணம் (-தண்டனை இவர்களின் கண் முன்) சென்றிருக்கிறது.
43:9 வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், “மிகைத்தவன், நன்கறிந்தவன் (-அல்லாஹ்) அவற்றைப் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்:
43:10 அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான். இன்னும், அதில் உங்களுக்கு பல பாதைகளை ஏற்படுத்தினான், (அவற்றின் மூலம்) நீங்கள் (உங்களுக்குத் தேவையான இடங்களுக்கு) சரியான பாதையில் (இலகுவாக) செல்வதற்காக.