>

உமர் ஷரீஃப் — 456

38:43 இன்னும், நம் புறத்தில் இருந்து கருணையாகவும் நிறைவான அறிவுடையவர்களுக்கு ஓர் உபதேசமாக இருப்பதற்காகவும் அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் (குணத்திலும் அழகிலும்) அவர்கள் போன்றவர்களையும் அவருக்கு நாம் (அதிகமாகக்) கொடுத்தோம்.

38:44 இன்னும், (அவருக்கு கூறினோம்:) “உமது கரத்தால் ஒரு பிடி புல்லை எடுப்பீராக! ஆக, அதன்மூலம் (பூமியில்) அடிப்பீராக! நீர் (செய்த) சத்தியத்தை முறிக்காதீர்!” நிச்சயமாக நாம் அவரை பொறுமையாளராக கண்டோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் (இன்பத்திலும் துன்பத்திலும் எல்லா நிலையிலும்) அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர் ஆவார்.

38:45 நமது அடியார்களான, (வணக்க வழிபாட்டில்) வலிமைகளும் (அல்லாஹ்வை அறிவதில்) அகப்பார்வையும் உடையவர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக!

38:46 நிச்சயமாக நாம் “மறுமையை அதிகம் நினைத்தல் (அதற்காக அமல் செய்தல்)” என்ற சிறப்பைக் கொண்டு அவர்களை விசேஷமாக தேர்ந்தெடுத்தோம். (அவர்களும் அல்லாஹ்வை, மறுமையை நினைவு கூர்ந்தவர்களாக இருந்ததுடன் மக்களுக்கும் அதை நினைவூட்டுபவர்களாக இருந்தார்கள்.)

38:47 இன்னும், நிச்சயமாக அவர்கள், நம்மிடம் மிகச் சிறந்தவர்களான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தார்கள்.

38:48 இன்னும், இஸ்மாயீலையும் அல்யசவுவையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்.

38:49 இது ஒரு நினைவூட்டல் (நல்லுபதேசம்) ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு அழகிய மீளுமிடம் (தங்குமிடம்) இருக்கிறது.

38:50 அத்ன் சொர்க்கங்கள் (அவர்களுக்கு) உண்டு. (அவற்றின்) வாசல்கள் அவர்களுக்காக திறக்கப்பட்டவையாக இருக்கும்.

38:51 அவற்றில் அவர்கள் (-கட்டில்கள் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதிகமான பழங்களையும் பானங்களையும் கொண்டுவரும்படி (கூறி தங்கள் பணியாளர்களை) அழைப்பார்கள்.

38:52 இன்னும், சம வயதுடைய, பார்வைகளை தாழ்த்திய பெண்கள் அவர்களிடம் இருப்பார்கள்.

38:53 விசாரணை நாளில் (நீங்கள் பெறுவீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவை இவைதான்.

38:54 நிச்சயமாக இவை (சொர்க்கவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட) நமது கொடையாகும். இவற்றுக்கு அழிவு, முடிவு அறவே இல்லை. (அல்லாஹ்வின் சொர்க்க அருள்கள் தீர்ந்து போகாதவை.)

38:55 (மேற்கூறப்பட்ட) இவை (நல்லவர்களுக்கு உரியதாகும்). ஆனால், நிச்சயமாக எல்லை மீறியவர்களுக்கு (-பாவிகளுக்கு) மிகக் கெட்ட மீளுமிடம்தான் உண்டு.

38:56 (அதுதான்) நரகம், அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். (அங்கே அவர்களுக்கு விரிப்பு இருக்கும்.) அந்த விரிப்பு (நெருப்பினால் ஆன) மிகக் கெட்ட விரிப்பாகும்.

38:57 இவை, கொதி நீரும் சீல் சலமும் ஆகும். ஆக, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்.

38:58 இன்னும், தோற்றத்தில் பல வகையான வேறு தண்டனைகளும் (அவர்களுக்கு) உண்டு.

38:59 இது உங்களுடன் (நரகத்தில்) நுழையக்கூடிய (இன்னொரு) கூட்டமாகும் (என்று பாவிகளின் தலைவர்களுக்கு கூறப்படும். அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்:) “அவர்களுக்கு (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும். நிச்சயமாக அவர்கள் நரகத்தில் எரிந்து பொசுங்குவார்கள்.”

38:60 (பாவிகள்) கூறுவார்கள்: “மாறாக, நீங்கள்தான் (நாங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தீர்கள்). உங்களுக்கு இங்கு வசதி கிடைக்காமல் போகட்டும். நீங்கள்தான் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினீர்கள். (எங்கள் பாவங்களுக்கு நீங்கள்தான் காரணம்.)” ஆக, (அவர்களது தங்குமிடம்) மிகக் கெட்ட தங்குமிடமாகும்.

38:61 (பாவிகள்) கூறுவார்கள்: “எங்கள் இறைவா! யார் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினாரோ (-எங்களை யார் பாவத்தில் தள்ளினாரோ) அவருக்கு நரகத்தில் இரண்டு மடங்கு தண்டனையை நீ அதிகப்படுத்து.”