>

உமர் ஷரீஃப் — 43

2:257 அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் உதவியாளன் ஆவான். இருள்களிலிருந்து ஒளியை நோக்கி அவன் அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும், நிராகரிப்பவர்களோ அவர்களின் உதவியாளர்கள் ஷைத்தான்கள் ஆவார்கள். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் (எல்லோரும்) நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.

2:258 (நபியே!) இப்ராஹீமிடம் அவருடைய இறைவன் விஷயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் (திமிரில் அவன் இப்படி தர்க்கித்தான்). “என் இறைவன், உயிர்ப்பிக்கிறான். இன்னும் மரணிக்கச் செய்கிறான்’’ என்று இப்ராஹீம் கூறியபோது, அவனோ “நானும் உயிர்ப்பிப்பேன். இன்னும் மரணிக்கச் செய்வேன்’’ என்று கூறினான். இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். ஆக, நீ அதை மேற்கிலிருந்து கொண்டு வா.’’ ஆக, (அதற்கு பதில் சொல்ல முடியாமல்) நிராகரித்த(அ)வன் வாயடைத்துப்போனான். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.

2:259 அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்து சென்றாரே அவரைப் போன்று ஒருவரை நீர் கவனிக்கவில்லையா? “இ(ந்த கிராமத்)தை, அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?’’ என்று அவர் கூறினார். ஆக, அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டுகள் வரை மரணத்தைக் கொடுத்தான், பிறகு, அவரை அவன் உயிர்ப்பித்தான். அல்லாஹ் கூறினான்: “நீர் எத்தனை (காலம் இங்கே) தங்கினீர்?’’ அவர் கூறினார்: “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்.’’ அல்லாஹ் கூறினான்: “மாறாக! நீர் நூறு ஆண்டுகள் (இங்கு) தங்கினீர். ஆக, உமது உணவையும், உமது பானத்தையும் நீர் பார்ப்பீராக! அவை கெட்டுப் போகவில்லை. இன்னும் உமது கழுதையைப் பார்ப்பீராக!. (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). இன்னும், (கழுதையின்) எலும்புகளைப் பார்ப்பீராக, எவ்வாறு அவற்றை அசைத்து (சிலவற்றுக்கு மேல் சிலவற்றை) உயர்த்துகிறோம்; பிறகு அவற்றுக்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்!! (இறந்த பிராணியை அல்லாஹ் உயிர்ப்பித்தது) தெளிவாக தெரிந்தபோது, “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) நான் அறிகிறேன்’’ என்று அவர் கூறினார்.