உமர் ஷரீஃப் — 402
29:46 வேதமுடையவர்களிடம் மிக அழகிய முறையிலேயே தவிர தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களில் எவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்களிடமே தவிர. (அந்த அநியாயக்காரர்கள் உங்களிடம் போர்தொடுத்தால் நீங்களும் அவர்களிடம் போரிடுங்கள்.) இன்னும், நீங்கள் கூறுங்கள்: எங்களுக்கு இறக்கப்பட்டதையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒருவன்தான். நாங்கள் அவனுக்கு கீழ்ப்பணிந்தவர்கள் ஆவோம்.
29:47 (உமக்கு முன்னர் உள்ள நபிமார்களுக்கு வேதத்தை இறக்கிய) இவ்வாறுதான் உமக்கு(ம்) இவ்வேதத்தை நாம் இறக்கினோம். (இதற்கு முன்) வேதங்களை நாம் எவர்களுக்கு கொடுத்தோமோ அவர்கள் (-இஸ்ரவேலர்களில் பலர்) இ(ந்த வேதத்)தை நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், இவர்களில் (-மக்காவாசிகளில்) இதை நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கிறார்கள். நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்றவர்கள்) நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
29:48 இதற்கு முன் (வேறு) ஒரு வேதத்தை நீர் ஓதுபவராக இருக்கவில்லை. உமது வலக்கரத்தால் அதை எழுதவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் வீணர்கள் (இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பதில்) நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
29:49 மாறாக, இ(ந்த வேதமான)து கல்வி கொடுக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களில் தெளிவான அத்தாட்சிகளாக இருக்கிறது. இன்னும், நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள் அநியாயக்காரர்களைத் தவிர.
29:50 இன்னும், அவர்கள் கூறினார்கள்: “இவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து அத்தாட்சிகள் இறக்கப்பட வேண்டாமா!” (நபியே!) கூறுவீராக! “அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றன. (அவன் நாடியபடி அத்தாட்சியை இறக்குவான்.) நானெல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்.”
29:51 (அவர்கள் கேட்கும் அத்தாட்சியை விட) இந்த வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு போதாதா? இது அவர்கள் மீது ஓதி காண்பிக்கப்படுகிறதே! நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் அருளும் அறிவுரையும் இருக்கின்றன.
29:52 (நபியே!) கூறுவீராக! எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். இன்னும், பொய்யை நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வை நிராகரித்தவர்களும் அவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள்.