உமர் ஷரீஃப் — 368
26:20 (மூஸா) கூறினார்: (ஆம்,) அ(ந்த கெட்ட காரியத்)தை நான் செய்தேன், அப்போது, நானோ (அல்லாஹ்வின் மார்க்கத்தை) அறியாதவர்களில் (ஒருவனாக) இருந்தேன்.
26:21 ஆக, உங்களை நான் பயந்தபோது உங்களை விட்டு ஓடிவிட்டேன். ஆக, என் இறைவன் எனக்கு (நபித்துவ) ஞானத்தை வழங்கினான். இன்னும், என்னை இறைத்தூதர்களில் ஒருவராக ஆக்கினான்.
26:22 இன்னும், அ(ப்படி என்னை நீ வளர்த்த)து நீ என் மீது சொல்லிக் காட்டுகிற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ (என் சமுதாயமான) இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய். (ஆனால், என்னை அடிமையாக்கவில்லை. அதற்காக நான் உன்னை சத்தியத்தின் பக்கம் அழைப்பதை விட முடியாது.)
26:23 ஃபிர்அவ்ன் கூறினான்: “அகிலங்களின் இறைவன் யார்?”
26:24 (மூஸா) கூறினார்: வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் அகிலங்களின் இறைவன் ஆவான். நீங்கள் (கண்ணால் பார்ப்பதை) உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருந்தால் (அதுபோன்றே படைப்பாளன் அல்லாஹ்தான். அவனே வணங்கத் தகுதியானவன் என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்.)
26:25 அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: (இவர் கற்பனையாக கூறுவதை) நீங்கள் செவியுறுகிறீர்களா?
26:26 (மூஸா) கூறினார்: அவன்தான் உங்கள் இறைவன், இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவன் ஆவான்.
26:27 (ஃபிர்அவ்ன்) கூறினான்: “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் இந்த தூதர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”
26:28 (மூஸா) கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும், (சூரியன் மறைகிற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும் இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான், நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிந்து கொள்வீர்கள்).
26:29 (ஃபிர்அவ்ன்) கூறினான்: “என்னை அன்றி வேறு ஒரு கடவுளை நீர் எடுத்துக் கொண்டால் (எனது சிறையில்) சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்மையும் ஆக்கி விடுவேன்.”
26:30 (மூஸா) கூறினார்: (அத்தாட்சிகளில்) தெளிவான ஒன்றை உம்மிடம் நான் கொண்டு வந்தாலுமா? (அல்லாஹ்வை நம்பிக்கைகொள்ள மறுப்பாய்!)
26:31 (ஃபிர்அவ்ன்) கூறினான்: ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் (என்னிடம்) அதைக் கொண்டுவாரீர்.
26:32 ஆக, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) பெரிய மலைப் பாம்பாக ஆகிவிட்டது.
26:33 இன்னும், அவர் தனது கையை (சட்டையின் முன் பக்க துவாரத்திலிருந்து) வெளியே எடுக்க, உடனே அது பார்ப்பவர்களுக்கு (மின்னும்) வெண்மையானதாக ஆகிவிட்டது.
26:34 அவன், தன்னை சுற்றியுள்ள பிரமுகர்களிடம் கூறினான்: “நிச்சயமாக இவர் (சூனியத்தை) நன்கறிந்த (திறமையான) ஒரு சூனியக்காரர்தான்.”
26:35 “இவர் உங்க(ள் அடிமைகளாகிய இஸ்ரவேலர்க)ளை தனது மந்திர சக்தியால் உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (இவர் விஷயத்தில்) நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?”
26:36 (அந்த பிரமுகர்கள்) கூறினார்கள்: “அவருக்கும் அவரது சகோதரருக்கும் நீ அவகாசம் அளி! இன்னும், (எகிப்தின் எல்லா) நகரங்களில் (இருக்கிற சூனியக்காரர்களை) ஒன்றுதிரட்டி அழைத்து வருபவர்களை அனுப்பிவை!”
26:37 “(சூனியத்தை) நன்கறிந்த பெரிய சூனியக்காரர்கள் எல்லோரையும் அவர்கள் உன்னிடம் அழைத்து வருவார்கள்.”
26:38 ஆக, அறியப்பட்ட ஒரு நாளுடைய குறிப்பிட்ட தவணையில் சூனியக்காரர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர்.
26:39 இன்னும், மக்களுக்கு அறிவிக்கப்பட்டது: “(மூஸாவும் சூனியக்காரர்களும் போட்டியிடும்போது யார் வெற்றியாளர் என்று பார்ப்பதற்கு) நீங்கள் ஒன்று சேருவீர்களா?”