உமர் ஷரீஃப் — 306
19:12 (ஆக, அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறந்தார். அவர் பேசுகின்ற வயதை அடைந்த போது நாம் அவரை நோக்கி கூறினோம்:) “யஹ்யாவே! (தவ்ராத்) வேதத்தை பலமாகப் பற்றிப் பிடிப்பீராக!” இன்னும், (வேதத்தைப் புரிவதற்கு) ஞானத்தை (அவர்) சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருக்குக் கொடுத்தோம்.
19:13 இன்னும், நம்மிடமிருந்து இரக்கத்தையும் தூய்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்). இன்னும், அவர் இறையச்சமுள்ளவராக இருந்தார்.
19:14 இன்னும், அவர் தன் பெற்றோருக்கு நன்மை புரிபவராக இருந்தார். அவர் முரடராக (பெருமைபிடித்தவராக), மாறுசெய்பவராக இருக்கவில்லை.
19:15 இன்னும், அவர் பிறந்த நாளிலும் அவர் மரணிக்கின்ற நாளிலும் அவர் உயிர்பெற்றவராக (மீண்டும்) எழுப்பப்படுகின்ற நாளிலும் அவருக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!
19:16 இன்னும், இவ்வேதத்தில் மர்யமை நினைவு கூர்வீராக! அவள் கிழக்கே இருக்கின்ற இடத்தில் தன் குடும்பத்தினரை விட்டு ஒதுங்கியபோது,
19:17 அவர்களுக்கு முன்புறத்திலிருந்து ஒரு திரையை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். ஆக, அவளிடம் நமது தூதரை அனுப்பினோம். அவர், அவளுக்கு (முன்) ஒரு முழுமையான மனிதராகத் தோன்றினார்.
19:18 அவள் கூறினாள்: “நிச்சயமாக நான் உம்மைவிட்டும் ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னிடமிருந்து விலகி சென்றுவிடுவீராக!)”
19:19 அவர் கூறினார்: “நானெல்லாம் உமது இறைவனின் தூதர்தான் (தீங்கை நாடக்கூடிய மனிதன் அல்ல), பரிசுத்தமான ஒரு குழந்தையை உமக்கு நான் வழங்குவதற்காக (உம்மிடம் வந்திருக்கிறேன்).”
19:20 அவள் கூறினாள்: “எனக்கு எப்படி குழந்தை உண்டாகும்? என்னை ஆடவர் எவரும் தொடவில்லையே! நான் ஒரு விபச்சாரியாக இல்லையே!”
19:21 அவர் கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான், “அது எனக்கு மிக எளிதா(ன காரியமா)கும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம் புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக (இவ்வாறு நடைபெறும்). இன்னும், இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”
19:22 ஆக, அவள் அதை (-அக்குழந்தையை) கர்ப்பத்தில் சுமந்தாள். மேலும், அதனுடன் (-அந்த கர்ப்பத்துடன்) தூரமான இடத்திற்கு விலகிச் சென்றாள்.
19:23 ஆக, (அவளுக்கு) பிரசவ வலி (ஏற்பட்டு அது) அவளை பேரீச்ச மரத்தின் பக்கம் கொண்டு சென்றது. அவள் கூறினாள்: “இதற்கு முன்னர் நான் மரணித்திருக்க வேண்டுமே! இன்னும், முற்றிலும் (மக்களின் சிந்தனையிலிருந்து) மறக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க வேண்டுமே!”
19:24 ஆக, அதனுடைய அடிப்புறத்திலிருந்து அவர் (-ஜிப்ரீல்) அவளை அழைத்தார்: “(மர்யமே!) கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழ் ஓர் நீரோடையை ஏற்படுத்தி இருக்கிறான்.”
19:25 “இன்னும், பேரீச்ச மரத்தின் நடுத்தண்டை உம் பக்கம் அசைப்பீராக! அது உம்மீது பழுத்த பழங்களைக் கொட்டும்.”