>

உமர் ஷரீஃப் — 267

15:91 அவர்கள் குர்ஆனைப் (பற்றி அது சூனியம், அது கவிதை, அது குறி கூறும் வாசகம் என்று வர்ணித்து அதைப்) பல வகைகளாக ஆக்கினார்கள்.

15:92 ஆகவே, உம் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் அனைவரிடமும் நாம் விசாரிப்போம்,

15:93 அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி.

15:94 ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்படுவதை மிகத் தெளிவாக பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக.

15:95 (நபியே! உம்மை) கேலிசெய்பவர்களிடமிருந்து நிச்சயமாக நாம் உம்மைப் பாதுகாப்போம்.

15:96 அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு தெய்வத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆக, அவர்கள் (தங்கள் முடிவை) விரைவில் அறிவார்கள்.

15:97 (நபியே!) நிச்சயமாக நீர் (உம்மைப் பற்றி) அவர்கள் (தரக் குறைவாக) கூறுவதால் உம் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை திட்டவட்டமாக அறிவோம்.

15:98 ஆகவே, உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இன்னும், (அவனுக்குச்) சிரம் பணிபவர்களில் ஆகிவிடுவீராக!

15:99 மேலும், உங்களுக்கு ‘யகீன்’ - நம்பிக்கை (எனும் மரணம்) வருகின்ற வரை உம் இறைவனை வணங்குவீராக!

16:1 அல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை (உடனே கொண்டுவரும்படி கூறி) நீங்கள் அவசரப்படுத்தாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் (-சிலை வணங்கிகள்) இணைவைப்பதை விட்டும் அவன் முற்றிலும் உயர்ந்தவன்.

16:2 அவன், தன் கட்டளைப்படி (வஹ்யி எனும்) உயிருடன், தன் அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது வானவர்களை இறக்குகிறான், “நிச்சயமாக என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; ஆகவே, (என்னை வணங்கி, என்னை மட்டுமே) அஞ்சுங்கள்” என்று (தூதர்களே!) நீங்கள் எச்சரியுங்கள்.

16:3 அவன் வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்தான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் முற்றிலும் உயர்ந்தவன்.

16:4 இந்திரியத்திலிருந்து மனிதனைப் படைத்தான். ஆக, அவனோ (இறைவனுக்கு) வெளிப்படையான எதிரியாக இருக்கிறான்.

16:5 மேலும், கால்நடைகள் - அவற்றை உங்களுக்காகப் படைத்தான். அவற்றில் உங்களுக்கு (குளிருக்கும் வெப்பத்திற்கும் இதமான) ஆடையும் இன்னும், பல பலன்களும் உள்ளன. இன்னும், அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.

16:6 இன்னும், நீங்கள் அவற்றை மாலையில் (இருப்பிடங்களுக்கு) ஓட்டி வரும் நேரத்திலும் (காலையில்) மேய்க்க ஓட்டிச் செல்லும் நேரத்திலும் அவற்றில் உங்களுக்கு அழகு(ம் மகிழ்ச்சியும்) இருக்கிறது.