உமர் ஷரீஃப் — 230
11:72 அவள் கூறினாள்: “என் துக்கமே! நானுமோ கிழவியாகவும், என் கணவராகிய இவரோ வயோதிகராகவும் இருக்கும் நிலையில் நான் பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!”
11:73 (வானவர்கள்) கூறினார்கள்: “(இப்ராஹீமின் மனைவியே!) அல்லாஹ்வுடைய கட்டளையில் வியப்படைகிறீரா? அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் (அபிவிருத்திகளும் இப்ராஹீமுடைய) வீட்டாரே உங்கள் மீது நிலவுக! நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா கீர்த்தியாளன்.”
11:74 ஆக, இப்ராஹீமை விட்டும் (பயமும்) திடுக்க(மு)ம் சென்றபோது, இன்னும், அவருக்கு நற்செய்தி வந்தபோது, லூத்துடைய மக்கள் விஷயத்தில் நம்மிடம் அவர் தர்க்கித்தார்.
11:75 நிச்சயமாக இப்ராஹீம் பெரும் சகிப்பாளர், அதிகம் பிரார்த்திப்பவர், (எப்போதும் நம் பக்கமே) திரும்பக் கூடியவர் ஆவார்.
11:76 இப்ராஹீமே! (தர்க்கம் செய்யாது) இதை விட்டும் புறக்கணிப்பீராக! நிச்சயமாக உம் இறைவனின் கட்டளை வந்து விட்டது. இன்னும், நிச்சயமாக அவர்கள் - தடுக்கமுடியாத தண்டனை அவர்களுக்கு வரும்.
11:77 இன்னும், நம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களால் அவர் சங்கடத்திற்குள்ளானார். இன்னும், அவர்களால் அவர் மனம் சுருங்கினார். இன்னும், “இது மிகக் கடுமையான (சோதனை) நாள்” என்று கூறினார்.
11:78 அவருடைய மக்கள் அவர் பக்கம் விரைந்தவர்களாக அவரிடம் வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய செயல்களை செய்பவர்களாகவே இருந்தனர். (அப்போது லூத்) கூறினார்: “என் மக்களே! இவர்கள் என் பெண் பிள்ளைகள். அவர்கள் உங்களுக்கு (நீங்கள் மணம் முடிக்க) மிக்க சுத்தமானவர்கள் (-ஒழுக்கமானவர்கள்). ஆகவே, (அவர்களை மணம் முடித்து, சுகமனுபவியுங்கள்!) அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், என் விருந்தினர் விஷயத்தில் என்னை அவமானப்படுத்தாதீர்கள். நல்லறிவுள்ள ஓர் ஆடவர் உங்களில் இல்லையா?”
11:79 அவர்கள் கூறினார்கள்: “உம் பெண் பிள்ளைகளிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை திட்டவட்டமாக நீர் அறிந்திருக்கிறீர்; இன்னும், நாங்கள் நாடுவதையும் நிச்சயமாக நீர் நன்கு அறிவீர்.”
11:80 அவர் கூறினார்: “எனக்கு உங்களிடம் (சண்டையிட) பலம் இருக்க வேண்டுமே! அல்லது, (உங்களை எதிர்க்க) வலிமையான ஓர் ஆதரவாளரின் பக்கம் நான் ஒதுங்கவேண்டுமே!”
11:81 (வானவர்கள்) கூறினார்கள்: “லூத்தே! நிச்சயமாக நாங்கள் உம் இறைவனின் (வானவ) தூதர்கள். (ஆகவே, இவர்கள்) அறவே உம் பக்கம் வந்து சேர மாட்டார்கள். ஆகவே, உம் மனைவியைத் தவிர, (மற்ற) உம் குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வீராக. இன்னும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற தண்டனை நிச்சயமாக அவளையும் அடையக்கூடியதே. நிச்சயமாக அவர்களின் (தண்டனை இறங்குவதற்கு) வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?”