>

உமர் ஷரீஃப் — 182

8:41 “நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால், இன்னும், (உண்மை மற்றும் பொய்யிற்கும் நடுவில்) பிரித்தறிவிக்கப்பட்ட நாளில்; (நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய) இரு படைகள் (போரில்) சந்தித்த நாளில் நம் அடியார் மீது நாம் இறக்கியதை நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நிச்சயமாக நீங்கள் (போரில்) வென்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒன்று அல்லாஹ்விற்கும், தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரியதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.”

8:42 நீங்கள் (‘பத்ர்’ போரில் மதீனாவுக்குச்) சமீபமான பள்ளத்தாக்கிலும், அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும் (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழே (உங்களை விட்டு தூரமாக) இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) வாக்குறுதி கொடுத்திருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் (வந்து சேர முடியாமல்) நீங்கள் தவறிழைத்திருப்பீர்கள். எனினும், முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும்; அழிபவன் ஆதாரத்துடன் அழிவதற்காகவும்; (தப்பி உயிர்) வாழ்பவன் ஆதாரத்துடன் வாழ்வதற்காகவும் (இவ்வாறு உங்களை அல்லாஹ் போரில் சந்திக்க வைத்தான்). நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.

8:43 (நபியே!) அல்லாஹ், உமது கனவில் அவர்களை உமக்கு குறைவாக காண்பித்த சமயத்தை நினைவு கூர்வீராக. உமக்கு அவர்களை அதிகமானவர்களாக காண்பித்திருந்தால் (பிறகு நீர் அதை முஸ்லிம்களுக்கு கூறி இருந்தால் முஸ்லிம்களே) நீங்கள் கோழையாகி இருப்பீர்கள்; இன்னும், (போர் பற்றிய) காரியத்தில் ஒருவருக்கொருவர் (உங்களுக்குள்) தர்க்கித்திருப்பீர்கள். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.

8:44 இன்னும், முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக நீங்கள் (அவர்களை) சந்தித்தபோது உங்கள் கண்களில் உங்களுக்கு அவர்களை குறைவாக காண்பித்து, உங்களை அவர்களுடைய கண்களில் குறைவாக காண்பித்தபோது (சத்தியம் வென்றது, அசத்தியம் தோற்றுப்போனது). இன்னும், அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படுகின்றன.

8:45 நம்பிக்கையாளர்களே! நீங்கள் (எதிரிகளின்) ஒரு பிரிவை (போரில்) சந்தித்தால், நீங்கள் வெற்றி பெறுவதற்காக (போர்க்களத்தில்) உறுதியாக இருங்கள். (-போர் நடக்கும் மைதானத்தை விட்டு விலகி ஓடிவிடாதீர்கள்.) இன்னும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.