உமர் ஷரீஃப் — 12
2:77 அவர்கள் இரகசியமாகப் பேசுவதையும் வெளிப்படையாக பேசுவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை (அவர்கள்) அறிய மாட்டார்களா?
2:78 இன்னும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் அவர்களில் உண்டு. வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்(தில் உள்ள)தை அவர்கள் அறியமாட்டார்கள். இன்னும் அவர்கள் (வீணாகச்) சந்தேகிக்கிறார்களே தவிர (உறுதியான கல்வியறிவு அவர்ளுக்கு) இல்லை.
2:79 ஆகவே, தங்கள் கரங்களால் (கற்பனையாக) புத்தகத்தை எழுதி, பிறகு அதைக் கொண்டு சொற்பக் கிரயத்தை வாங்குவதற்காக, “இது அல்லாஹ்விடமிருந்து (வந்த வேதமாகும்)” என்று கூறுபவர்களுக்குக் கேடுதான்! ஆக, அவர்களின் கரங்கள் எதை எழுதியதோ அதனால் அவர்களுக்குக் கேடுதான்! இன்னும், அவர்கள் (இதன் மூலம்) எதை சம்பாதிக்கிறார்களோ அதனாலும் அவர்களுக்குக் கேடுதான்!
2:80 இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “எண்ணப்பட்ட (சில) நாட்களைத் தவிர, நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது.” (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்விடம் (அவ்வாறு ஏதேனும்) ஓர் உடன்படிக்கையை (நீங்கள்) ஏற்படுத்திக் கொண்டீர்களா? (அப்படியெனில்) அல்லாஹ் தன் உறுதிமொழியை அறவே மாற்ற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுகிறீர்களா?
2:81 அவ்வாறன்று! எவர்கள் தீமையைச் சம்பாதித்து, இன்னும் அவர்களுடைய பாவம் அவர்களைச் சூழ்ந்து கொண்டதோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
2:82 இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் சொர்க்கவாசிகள் ஆவார்கள்! அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
2:83 இன்னும், (யூதர்களே!) “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை (-உதவி உபகாரம்) செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்” என்று (உங்கள் மூதாதைகளாகிய) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்ற அனைவரும் இந்த ஒப்பந்தத்திலிருந்து) திரும்பிவிட்டீர்கள். இன்னும் நீங்கள் (எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைகளை) புறக்கணிப்பவர்கள் ஆவீர்கள்.